Sunday 29 May 2016

ரெட்டவால் திருவிளையாடல்



திருவிளையாடல் என்றவுடன் நடிகர் திலகம் சிவாஜி, நாகேஷ்யை மட்டுமே நம்மில் பலரும்  தெரிந்து வைத்துள்ளோம். சிவபெருமான் தன்னுடைய அடியார்கள் மீதும், சிற்றுயிர்கள் மீதும் கொண்டஅன்பினால் தாமே பூலோகத்திற்கு வந்து செய்த அற்புதங்களே திருவிளையாடல்.  சிவனின் திருவிளையாடல்கள் பல உயிரின பாதுகாப்பாக இருந்தது. சங்கப்பாடல்கள்  பழம் பெரும் மதுரையின் இயற்கையினை அழகுற கூறியுள்ளன. அவைகள் அனைத்தும் இன்று மிகைத்த கற்பனையோ என எண்ணும் வகையில் மாறி வருகின்றது மதுரை. மதுரைக்கு வருபவர்கள் சுபிட்சம் பெற்றவர்களாய் மாறுவர் என்கின்றது திருவிளையாடல் புராணம். திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது. இப்புராணம் இறைவழிப்பாட்டினை இயற்கை செல்வங்களோடு இணைத்து கொண்டுசெல்கின்றது. சிவனின் திருவிளையாடல்களில் நாரைக்கு முக்தி கொடுத்த  படலம், பரியை நரியாக்கிய படலம், வெள்ளையானை சாபம் தீர்த்தப்படலம், பன்றி குட்டிக்கு முலை கொடுத்தப்படலம் என உயிரினப்பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தமைந்துள்ளது. சங்க இலக்கியங்கள் இயற்கையை பாதுகாப்பது ஆன்மீகத்தின் ஒருபகுதியாக மாற்றி வைத்திருந்தனர்.



ரெட்டவால் குறித்து தினகரன் நாளிதழில் வெளியான எனது கட்டுரை



கருங்குருவிக்கு உபதேசம் செய்தபடலம்










சரி தலைப்பிற்கு வருவதற்காக திருவிளையாடல் புராணத்தில் “கருங்குருவிக்கு உபதேசம் செய்தபடலம்” பகுதியினை காண்போம். சாபத்தின் பிடியில் தவித்த கருங்குருவியினை பருந்துகளும் பெரும் பறவைகளும் விரட்டி அடித்து வந்தன. பறவைகளுக்கு பயந்து காட்டினில் காலம் தள்ளுவதென முடிவெடித்தது கருங்குருவி. காட்டினிலும் ஒளிந்து மறைந்த வாழ்க்கையே வாழ்ந்தது. அப்பொழுது சிவனடியார் ஒருவர் காட்டில் தவம்புரிந்தார். அவரின் சீடர்களுக்கு தினமும் தியான வகுப்புகளையும் நடத்தினார். அப்பாடங்களை மரத்தின் மீதிருந்தபடியே கருங்குருவி கவனித்து வந்தது. அவர் மதுரையின் இயற்கை வளங்களையும்  நகரின் பெருமைகளையும் பலவாறு விளக்கி வகுப்பெடுத்தார். மதுரை நகர் செல்வதன் பலனாக பிறவி பிணியும், தோஷங்களும் நீங்கும் என்றார். மதுரையின் பொற்றாமரைக் குளத்தின் நீர் உடலில் பட்டாலே சுபிட்சம் ஏற்படும் என்றார். இவ்வகுப்பினை கவனித்த கருங்குருவியும்  மதுரையினை அடைந்து பொற்றாமரை குளத்தில் உடல் நனைத்தது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிகளின் உத்திரத்தில் அமர்ந்து தெய்வ தரிசனம் செய்தது. அதன் பலனாக இறைவன், கருங்குருவியை இனி நீயும் உனது வாரிசுகளும் வலியன் என அழைக்கப்படுவீர்கள். மற்ற பறவைகளை எதிர்க்க வல்லமை பெறுவீர்கள் என்றார்.

இரட்டைவால் குருவி

கருங்குருவியினை ஆங்கிலத்தில் BLACK DRONGO எனவும், தமிழில் கரிக்குருவி, கரிச்சான், கருவெட்டுவாலி, இரட்டைவால் குருவி என அழைக்கின்றனர். இந்த இரட்டவால் உருவத்தில் சிறியவையாக இருந்தாலும் பருந்துகளுக்கும் சவால் விடுக்கும். நம்ம இரட்டவால் பக்கம் மற்ற எந்த பறவைகளும் சேட்டைகள் வைத்து கொள்வதில்லை. மற்ற பறவைகளுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் ஆதள பகவானாக இரட்டவால் பார்க்கப்படுகின்றான். இவனின் வசிப்பிடம் அருகே கூடுகளை கட்டி சிறிய வகைப்பறவைகள் பெரும் பறவைகளிடமிருந்து பாதுகாப்பினை பெறுகின்றனர். இவன் பூச்சிகளை வேட்டையாடுவதில் கில்லாடி. தட்டான்களை பறந்தவண்ணமே பிடித்து லபக் செய்வான். பூச்சிகளை கொல்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகிறான் நம்ம இரட்டவால். இத் திருவிளையாடல்களை  அறிந்தபின்பும்  தமிழர்கள்  பறவைகளையும் உயிரினங்களையும் துன்புறுத்தலாமா?


நமது பகுதி
நீர்நிலைகளை நோக்கி  தற்பொழுது ஆண்டுதோறும் பறவைகள் பலவருகை புரிகின்றன. இவைகளில் பல வெளிநாட்டு பறவையென பறவையாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் இவ்வாறு பயணிப்பது வலசை போவது என்பர். ஆண்டு தோறும் வந்து கூடு கட்டி முட்டையிட்டு செல்கின்றதெனில் இப் பறவைகளுக்கு நமது பகுதி தானே சொந்த ஊராக இருக்க முடியம், இவைகளை எப்படி வெளிநாட்டு பறவை என்பது என்ற சந்தேகமும் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.  மதுரை பறவைகளுக்கு சுபிட்சம் கிடைக்கும் இடமென திருவிளையாடல் மூலம் அறிகின்றோம். ஆனால் மதுரை மாவட்டத்தில் ஒரு பறவைகள் சரணாலயம் கூட இல்லை என்பது வருந்ததக்கது. இன்றும் பறவைகள் எழுப்பும் ஒலிகளை இந்து மற்றும் இஸ்லாமிய  மத நம்பிக்கையாளர்கள் இறைவனை பறவைகள் துதிப்பதான  மந்திர ஒலியாகதான் நினைக்கின்றனர். இவைகளை உணர்ந்து மதுரையின் இளைஞர்களால் மீண்டும் கடம்பவன மரங்களுடனே பறவைகள்  வாழும் பகுதியாக மீண்டெள மரம்நடவும் நீர்நிலைகளை பாதுகாக்கவும் ஊக்குவிப்போம். 
        வஹாப் ஷாஜஹான், திருமங்கலம்.                          

No comments:

Post a Comment