Monday 29 February 2016

பலாச மலர்கள்

பலாப்பழம் தெரியும். பழரசம் தெரியும். காக்காமுட்டை பழரசமும் தெரியும். பாசமலர் படம் கூட தெரியும். அதென்ன பலாச மலர்? இந்த பெயரில் மலர்கள் இருப்பது குறித்து  பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதி மனிதன் நோய்களுக்கு மலர்களையும், இலைகளையும், வேர்களையும் கொண்டு மருத்துவம் செய்து குணமடைந்து வந்தான். இன்று நாம்  அவர்கள் காப்பாற்றிய மரங்களையும் மருத்துவமுறைகளையும் துலைத்து விட்டோம். மூலிகை மருத்துவத்தில் நாம் தொடர்ச்சியாக ஈடுபடாத காரணங்களால்  வேதிப் பொருட்கள் உட்கொண்டு உடலை விஷமாக மாற்றி வருகின்றோம். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 மலர்களின் பெயர்களை நடிகர் சிவக்குமார் வரிசையாக மூச்சுவிடாமல் கூறினால் ரசிப்போம். ஆனால் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களில் எத்தனையை உயிர்ப்புடன் வைத்துள்ளோம். இன்னும் எத்தனை மலர்கள் நமக்கு அடையாளப்படாமல் இருக்கின்றது. இவை குறித்து கவலை கொள்ள இங்கு எத்தனை பேர்கள் உள்ளோம். இன்றைய அவசர உலகில்  இயற்கை அழகு கொஞ்சும் மலர்களை ரசிப்பதற்கு தான் நமக்கு நேரமிருக்கின்றதா?.

Wednesday 24 February 2016

மரணத்தில் மிதக்கும் சொற்கள்


வாசிப்பு என்னிடமிருந்து தூரம் சென்ற காலம் போய் தற்பொழுது வாசிப்பு வசப்படும் காலமாக மாறியிருக்கின்றது. இதை தக்க வைக்கும் முயற்சியாக தேர்ந்தெடுத்த நூல்களை வாசித்து வருகிறேன். அர்ஷியா சார் அவர்களின் மரணத்தில் மிதக்கும் சொற்கள் சிறுகதை தொகுப்பு வாசிப்பில் நேற்று முன் இரவு பொழுது வசப்பட்டது. சிறு குறிப்பு வைத்து கொண்டே வாசிப்பேன். நூல் முழுவதும் படித்து முடித்த பின் சிறுகுறிப்புகள் பலபக்கங்களை உள்வாங்கியிருந்தது. சிறு குறிப்புகளை பதிவாக போடலாம் என எண்ணி இந்த சிறு முயற்சி.  முதல் கதை மெளனசுழியில் மாற்றுமதத்தவரை திருமணம் செய்த மகளுடனான  ரசாபாசத்தினை உளுவ மீனின் ருசிக்கு இடையே விருந்து படைக்கிறார்.  மகள் பெயரில் எழுதும் எழுத்தாளர் என்பதால் முதல் கதையும் மகள் நேசம் குறித்து உருகவைக்கின்றார்.