Thursday 10 December 2015

சிலுக்கு மரமே..சிலுக்கு மரமே..சில்லைகள் கொண்டுவா..


பாசமாக பேசுகையிலும், படுக்கை அறை கொஞ்சலிலும், பாராட்டுவதற்கும் பயன்படுவது பறவைகள். நமக்கு பிடித்தவர்களை வர்ணிக்க வார்த்தையில்லை என்போம். பின்பு என் கொஞ்சும் புறாவே, செல்லக் கிளியே, மைனாவே , என் மயிலே, என் சிட்டே என பலவாறு வர்ணிப்போம். பாராட்டு வார்த்தைகளுக்கு மட்டுமா பறவைகள். இல்லை இல்லை. வசவு வார்த்தைகளிலும் வண்ண பறவைகள் உள்ளன. ஆக்கம் கெட்ட கூவை, திருட்டு காக்கா வேல காட்டாத. கள்ளப்பருந்து சேட்டை செய்யாதே,வாத்து மடையா என்போம். பலவகைகளில் மனிதனின் வாழ்வில் பறவைகள் ஒன்று கலந்து விட்டன. சரி பில்டப் போதும்  கட்டுரைக்கு வாப்பா என நீங்கள் சொல்வது புரிகிறது நண்பர்களே.
சில்லாட்டை
சில்லாட்டை இன்று  இது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் தென்னை பனை மரங்கள் இன்று காட்சி பொருளாகிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் காண கிடைக்கா  பொருள் தென்னை, பனை மரங்கள். தென்னை மற்றும் பனையின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுபவை என எங்காவது படித்திருப்பீர்கள். படிக்காது இருந்தால் இன்று அறிந்து கொள்ளுங்கள். பனை மற்றும் தென்னைகள் இருக்கும் காலமெல்லாம் பயன் கொடுக்கும். ஆம் மொட்டை பனை தென்னைகள் கூட பறவைகள், பாம்புகள் வாழ்விடமாக இருக்கும்.