Monday 13 January 2014

பொங்கல் கடமை.

தமிழர்கள் தங்களின் குடும்ப பழம்பெருமைகளையும் பன்னெடும் மத சாதிய உயர்வுகளையும் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு தங்கள் பிறந்த இத்தமிழ்மண்ணின் பெருமைகளையும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த உழவுசார் வாழ்வினை அறிவது இல்லை. பொங்கல் பண்டிகையின் மூலம் இன்றைய இளைஞர்கள் கற்க வேண்டியது முதலில்
உண்ண உணவு வழங்கி வரும் உழவிற்கு வந்தனை செய்யவேண்டுவதும் வந்தனை செய்யாவிடினும் நிந்தனை செய்யாமல் இருக்கவேண்டியே இக்கட்டுரை.

சங்கம் அறிவோம்.
தமிழர்கள் தமது பெருமைகளை அறிந்துகொள்வதற்கான சங்க இலக்கிய நூல்களை தங்களிடமிருந்து வெகுதொலைவிற்கு ஆங்கிலக்கல்வியை முன்னிருத்தி  தொலைத்து வருகின்றனர்.சங்க இலக்கியம் கற்ற எந்த மனிதனும் தனது மண்னை வறண்டு போக செய்யமாட்டான். ஏனெனில் சங்க நூல்கள் அனைத்தும் இயற்கையோடு இணைந்து தமிழர்கள் வாழ்ந்த பெருமைதனை சொல்லிவருகின்றது.சங்க இலக்கியங்களில் மனிதனின் வாழ்வு, வீரம், சோகம்,வெற்றி,தோல்வி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இயற்கை சார்ந்த விவசாய நடவடிக்கைகளை உவமானங்களாக கொண்டே படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக குறுந்தொகை பாடலில் “சிவப்பு தினணயானது கரும்பினை போன்று வளர்ந்துள்ளது என்பதிலும்,புறநானூறு பாடலில் மரண செய்தி கேட்ட பெண்கள் மார்பில் அடித்து அழுகின்ற நிகழ்வினை “ஊழின் உருப்ப எருக்கிய மகிளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற” என்பதில் அதாவது மார்பில் அடித்து அழும்பொழுது பெண்களின் உடைந்த வளையல்கள் வாழைப்பூக்கள் போன்று நிலத்தில் சிதறின என உரைப்பதிலிருந்து அறியலாம்.

Sunday 12 January 2014

கதிர் பொங்கல்மலர்

பசுமைநடை பொங்கல்விழா
நேற்றைய ஞாயிறு (12.01.14) மிகுந்த உற்சாகம் மிகுந்த நாளாக அமைந்தது. என்னவெனில் நண்பர்களே பசுமைநடை பொங்கல்விழா இனிதே நடைபெற்றது.எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டில் மாலை 4 மணிக்கு துவங்கிய விழா இரவு 8.30 மணிவரை மிகவும் பயனுள்ள பொழுதாக அமைந்தது.இதில் வயிற்றிக்கும் செவிக்கும் வழங்கப்பட்ட திகட்டாத இனிப்பானது இப்பொழுது நினைத்தாலும் தித்திக்கின்றது.

கதிர் பொங்கல்மலர்
முதலில் அனைவரும் இணைந்து சர்க்கரை பொங்கல் தயார் செய்து சாப்பிட்ட பிறகு கதிர் பொங்கல்மலர் (இரண்டாம் ஆண்டு) வெளியிடப்பட்டது. எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் வீட்டின் “நிலா முற்றம் பெயருக்கு ஏற்றார்போல் மொட்டை மாடியில் மலர்வெளியிடு நடைபெற்றது. சர்க்கரைப் பொங்கல்களுக்கு போட்டியாக எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களின் சிறப்புரையும்,மலர் வெளியிட்ட எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் மற்றும் மலரினை பெற்ற தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம்,பெ.சின்னச்சாமி ஆசிரியர்,கு.குருசாமி துணை ஆட்சியர்(ஓய்வு) அவர்களும் தலைமையேற்ற மூ.பா.முத்துக்கிருஷ்ணனும் நன்றியுரையாற்றிய தி.கண்ணன் ஆசிரியர் அவர்களும் சிறப்பாக உரைநிகழ்த்தினர். இரவு வீடுதிரும்பிய பின்பும் கையில் நெய்மணமும் மனதில் தமிழர்தன் விருந்தோம்பல் மற்றும் பாரம்பரிய பெருமையும் நிலைத்து மகிழ்ச்சி பொங்கியது.