Saturday 15 December 2012

இறப்புக்கால உதவித் தொகை


இறப்புக்கால உதவித் தொகை

தொழிலாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக்கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்குவதற்கான தீர்மானம் தொழிலாளர் நல வாரியக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர் நலத் துறை அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நல வாரியத்தின் 74-வது கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை உயர்த்தியும், தொழிலாளர்கள் பணிக்காலத்தில் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு இறப்புக் கால உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து இணக்க பேச்சுவார்த்தைக்காக சென்னைக்கு வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குறைந்த வாடகையில் தங்குவதற்காக ஜீவா இல்லம் கட்டப்பட்டுள்ளது. ரூ.30 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட அந்த இல்லத்தை முன்னதாக அமைச்சர் செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தொழிலாளர் நலத் துறையில் பணிபுரிந்து இறந்த 9 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளையும் அவர் வழங்கினார்.

 நன்றி.தினமணி

Wednesday 12 December 2012

சிறார் அடிமைத் தொழிலாளி


சிறார் அடிமைத் தொழிலாளி

 

நன்றி பிபிசி

 

இளமையில் தொழில் -- ஐ.நா மன்றம் கவலை


உலகெங்கும் 20 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று சிறார் தொழில் செய்வது குறித்த புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

இவர்களில் சுமார் ஒன்றரை கோடி சிறார்கள் எந்த ஒரு பள்ளிக் கல்வியும் கிடைக்கப் பெறாமலே இருக்கிறார்கள் என்று அது கூறுகிறது.

இதுபோல சிறார்கள் வேலை வாங்கப்படுவது குறைந்து வரும் விகிதம் மிகவும் மந்தமாகவே இருப்பதாகவும், உலக அளவில் கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை இது குலைப்பதாகவும், கல்விக்கான ஐ.நா மன்ற சிறப்புத் தூதர் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன்) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்காவில் வேலையில் ஈடுபட நேரிடும் சிறார்களின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு வாக்கில் மேலும் 1.6 கோடியாக அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பு கூறுகிறது.

 

 

இந்தியா உள்ளிட்ட வறிய நாடுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

உலகில் தற்போது 2 கோடியே 70 லட்சம் பேர் அடிமைத் தொழிலாளிகளாய் இருப்பதாக ஃப்ரீ த ஸ்லேவ்ஸ் அடிமை விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அமெரிக்காவுக்கும், கர்ரீபியன் தீவுகளுக்கும் அடிமைகளாக ஏற்றுமதியானவர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மனித சரித்திரத்தில் எந்த ஒரு நேரத்திலும் இருந்த அடிமைத் தொழிலாளிகளின் எண்ணிக்கையைவிட தற்போதைய உலகில் கூடுதலான அடிமைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்பது ஒரு அதிர்ச்சித் தகவலாக வந்துள்ளது.

மிக வேகமான ஜனத்தொகை அதிகரிப்பு, ஏழ்மை, அரசாங்க ஊழல் போன்றவை காரணமாக பல நாடுகளில் அடிமைத் தொழிலாளிகள் இன்றளவும் இருந்துவரவே செய்கிறார்கள் ஃப்ரீ த ஸ்லேவ்ஸின் ஆராய்ச்சியாளர் கெவின் பேல்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க அடிமைகள்

முந்தைய நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து தொழிலாளர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டனர்.

16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஆப்பிரிக்காவிலிருந்து பிற கண்டங்களுக்கு கப்பல்களில் ஏற்றி அனுப்பப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 1 கோடியே 25 லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது

ஆகவே தற்போதைய அடிமைகள் எண்ணிக்கை இதனை விட இரு மடங்குக்கும் அதிகம் என்று தெரியவருகிறது.

அடிமைகள் என்பதெல்லாம் பழங்கதை என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல வடிவங்களிலும் அடிமைத் தொழில் இன்றளவும் எல்லா கண்டங்களிலும் நீடிக்கவே செய்கிறது.

 

நவீன காலத்து அடிமைகள்

பாலியல் தொழிலுக்காகவும் உடல் உழைப்புக்காகவும் சுரண்டப்படுபவர்கள், வாங்கிய கடனை திரும்பச் செலுத்தவில்லை என்பதற்காக கொத்தடிமைகளாக வேலைபார்க்க நேர்ந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களை அடிமைகள் என்ற வரையறைக்குள் கொண்டுவர முடியும்.

"அடிமை என்றவுடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருவது வட இந்தியாவில் கல்லுடைக்கும் மக்களைத்தான்", என்று கூறுகிறார் அடிமைத் தொழிலாளிகள் பற்றி புலனாய்வு செய்து தகவல் வெளியிட்டுவரும் பத்திரிகையாளர் பென் ஸ்கின்னர்.

"தான் வாங்கிய ஒரு சிறு கடன் தொகையை திரும்பக் கொடுக்க வழியில்லாமல் தான் காலாகாலமாக கொத்தடிமையாக வேலைபார்ப்பதாக இந்த தொழிலாளிகள் கூறுகின்றனர்", என ஸ்கின்னர் தெரிவித்தார்.

வேலையை விட்டு ஓடினால், குவாரியின் ஒப்பந்தக்காரரால் கற்பனைக்கெட்டாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்று அத்தொழிலாளிளிகள் அஞ்சுவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய உலகில் ஏழை நாடுகளில்தான் அடிமைத் தொழிலாளிகள் பெரு எண்ணிக்கையில் காணப்படுகின்றனர்.

ஆனால் வளர்ந்த நாடுகளிலும்கூட அடிமைத் தொழிலை ஒழிப்பதில் சட்டங்கள் போதிய வலிமை உடையதாக இல்லை என்று கெவின் பேல்ஸ் நொந்துகொண்டார்.

"வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சொத்துபத்துக்களையும் அடமானம் வைத்து விட்டு கள்ளத்தோனி ஏறி வெளிநாட்டுக்கு வந்த பின்னர், பயண ஆவணங்களையும் பறிகொடுத்த நிலையில், வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு அடுப்படியில் ஓய்வு உறக்கம் இன்றி வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளியும்கூட இந்தக் காலத்து அடிமைகள்தான்." என அமெரிக்க அதிபர் ஒபாமா அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

நமது உரை

 

உலகம் முழுமையிலும் தற்பொழுது அடிமைத்தொழிலாளர்கள் அதிகரிப்பைப் பார்க்கும் பொழுது கூடிய விரைவில் தொழிலாளர்களின் ஒன்றிணைந்த புரட்சி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது தெரிய வருகின்றது.தொழிலளர்கள் நசுக்கப்பட்ட காலங்களில் எல்லாம் எழுச்சியும் கண்டது தான் வரலாறு. தொழிலாளர்கள் அமைதியாக இருப்பதாக நினைக்கும் இவர்களுக்கு தொழிலாளர்கள் அமைதியாக இருக்கும் எரிமலைக்கும் அணுவை போன்று எங்களை சிறியவர்களாக நினைப்பவர்களுக்கு அணுவெடிப்பினை போன்றவர்கள் என கூடிய விரைவில் நிரூபிப்பார்கள்.

.ஷாஜஹான்,9942522470
திருமங்கலம்.மதுரை.